திருப்பூர், கோவை மாவட்ட மக்களின் கனவுத் திட்டமான, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார். ரூ.1916 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்படவுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களின் வறட்சிப்பகுதிகளில் உள்ள 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பி, அதன் மூலமாக நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது, விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக அதனை பயன்படுத்தும் வகையில் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் வடிவமைக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு பணிகளுக்காக, கடந்த 2016- ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ரூ. 3.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக முதல்வராக பதவியேற்ற பழனிசாமி, 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
அதே ஆண்டு டிசம்பர் மாதம் பணிகள் தொடங்கின. இந்த திட்டத்திற்கு, ரூ.1,652 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அத்திக்கடவு – அவிநாசி திட்டம், 80 சதவீதத்திற்கு மேல் நிறைவடைந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை இன்று காலை தொடங்கி வைத்தார். சென்னையில் நடந்த இந்நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர், நீர்வளத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் பாளையத்தில் நடந்த நிகழ்ச் சியில், அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் மற்றும் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர். இது குறித்து விவசாயிகள், பொதுமக்கள் கூறியதாவது: அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேறியதன் மூலம் எங்களின் 60 ஆண்டு கால கனவு திட்டம் நிறை வேறியுள்ளது. இதற்காக எவ்வளவோ போராட்டங்களை நடத்தி உள்ளோம். தற்போது அந்த திட்டம் நிறைவேற்ற ப்பட்டுள்ளதன் மூலம் ஏதோ 2-வது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற்றது போல் உள்ளது. இந்த திட்டம் மூலம் 3 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த திட்டம் நிறைவேற அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு அளித்தனர். இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
Leave a Reply