கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் அமைச்சர் கே. சுதர்சனம் 2005 ஜனவரி 9 அன்று துப்பாக்கிச்சூட்டில் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று பவாரியா கொள்ளையர்களுக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தொடர்ச்சியான ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
சுதர்சனம் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், அவரை சுட்டுக்கொன்று, குடும்பத்தினரை தாக்கி 62 சவரன் நகைகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பின்னர், குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டது. ஐஜி ஜாங்கிட் தலைமையில் செயல்பட்ட இந்த குழு, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கும்பலைக் கைது செய்தது. இந்த விசாரணை பின்னர் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படமாக உருவானது.
இவ்வழக்கில் மொத்தம் 32 பேர்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளிகளில் இருவர் என்கவுன்டரில் உயிரிழந்தனர். மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக், ஜெயில்தார் சிங் ஆகியோருக்கு எதிராக நீண்டகாலமாக விசாரணை நடைபெற்றது. இதில் 86 காவல் துறை சாட்சிகள் ஆஜராகினர்.
நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் இன்று அளித்த தீர்ப்பில், ஜெகதீஷுக்கு நான்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.40,000 அபராதம், ராகேஷுக்கு ஐந்து ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம், அசோக்குக்கு நான்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.40,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆயுள் தண்டனையும் ஒன்றுக்குப் பின் ஒன்று தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஜெயில்தார் சிங்குக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.



Leave a Reply