அதிமுகவின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டதற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் வலியுறுத்தினார். இந்த கருத்து அதிமுக வட்டாரங்களில் கடும் அதிர்வை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி முதலில் செங்கோட்டையனை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கியிருந்தார். ஆனால், நேற்று நடந்த முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்வில் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் மற்றும் செங்கோட்டையன் மூவரும் ஒன்றாக பங்கேற்றது மீண்டும் சர்ச்சையை கிளப்பியது.
அந்நிகழ்ச்சிக்குப் பிறகு, “என்னை அதிமுகவிலிருந்து நீக்கினால் மகிழ்ச்சி” என செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில்,
“அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் ஒழுங்குமுறைக்கும் முரணாகச் செயல்பட்டதாலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு கழகத்தின் கண்ணியத்திற்கு களங்கம் உண்டாக்கியதாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ. செங்கோட்டையன், எம்.எல்.ஏ., அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குகிறேன். கட்சியினர் யாரும் இவருடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட இந்த நீக்க நடவடிக்கை, கட்சியின் உள்நிலை அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply