அதிமுகக்கு இது கடைசி தேர்தலாக இருக்க வேண்டும் – செந்தில் பாலாஜி

Spread the love

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) நடவடிக்கையை எதிர்த்து, கோவை சிவானந்தா காலனி பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர், SIR நடைமுறையும் பாஜக அரசின் நடவடிக்கைகளும் மக்களின் வாக்குரிமையை குறைக்கும் செயல் என குற்றம் சாட்டி, கண்டன பதாகைகள் ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய செந்தில் பாலாஜி,
“SIR நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல் தலைவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின். IT, ED மூலம் அடக்கு முறையை முன்னெடுத்த பாஜக, இப்போது அதை SIR வழியாக மேற்கொள்கிறது,” என்று கூறினார்.

மேலும்,
“இந்திய தேர்தல் ஆணையம் அவசரமாக இதனை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏது? இது மக்கள் பட்டியலை சீரமைப்பது அல்ல; வாக்குரிமையை குறைக்கும் முயற்சி. பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதையே தமிழ்நாட்டில் செயல்படுத்த முயற்சி நடக்கிறது,” என்று அவர் கூறினார்.

அதேபோல்,
“அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்களை மூடி கொண்டு SIR-ஐ ஆதரிக்கிறார். வரவிருக்கும் தேர்தலே அதிமுகக்கான கடைசி தேர்தல் என்பதை நாம் காட்ட வேண்டும்,” என அவர் கடுமையாக விமர்சித்தார்.

2026 தேர்தலை நோக்கி பேசும் போது அவர்,
“கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அல்லது அதிமுக வெற்றி பெறக் கூடாது. கோவையில் மேம்பாலம், நூலகம், செம்மொழி பூங்கா என வளர்ச்சியை எம்.எல்.ஏ இல்லாமலே முதல்வர் வழங்கி வருகிறார்,” என்று கூறினார்.

இறுதியாக,
“அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே SIR முயற்சியை முறியடிக்க முடியும்,” என அவர் வலியுறுத்தினார்.