அங்கம்மாள் படத்துக்காக சுருட்டு பிடிக்க பழகினேன் – நடிகை கீதா கைலாசம்

Spread the love

எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி என்ற கதை ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. இதில் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார்.

விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சரண், பரணி, முல்லை அரசி, தென்றல் ரகுநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் பிரோ மூவி ஸ்டேஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் நவ.21-ல் திரைக்கு வருகிறது.

இதையொட்டி படம் பற்றிய பேசிய கீதா கைலாசம், “இப்படம் அம்மா மகன் பற்றிய கதையைப் பேசுகிறது. இதில் ரவிக்கை அணியாமல் சுருட்டுப் பிடித்தபடி நடித்துள்ளேன். கதாபாத்திரத்துக்காக சுருட்டு மற்றும் பீடி புகைக்கப் பயிற்சி எடுத்தேன். முதலில் கஷ்டமாக இருந்தது. தொடர்ந்து பயிற்சி செய்தால் பழக்கமாகிவிடும் என்று எச்சரித்ததால் அதைப் படப்பிடிப்பில் மட்டுமே பயன்படுத்தினேன். ரவிக்கை அணியாமல் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சுருட்டு பிடித்தபடி கிராமத்துச் சாலையில் டிவிஎஸ் 50 ஓட்டி சென்றது சவாலாக இருந்தது.சிறுவயதில் இருசக்கர வாகனம் ஓட்டி இருந்தாலும் இப்போது பதற்றமாக இருந்தது. இப்படம் திருநெல்வேலி மாவட்டத்தின் கதையாக உருவாகி இருக்கிறது. நெல்லை பேச்சு வழக்கை, முயற்சி செய்திருக்கிறேன். படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பத்மநேரி கிராமத்தில் நடந்தது. அங்குள்ள மனிதர்களிடம் பழகியது புதிய உணர்வை கொடுத்தது” என்றார்.

இப்படத்தின் கதையின் நாயகியாக கீதா கைலாசம் நடித்திருக்கிறார்.சரண்,பரணி,முல்லையரசி,தென்றல் ரகுநாதன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.இப்படத்தை விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். அஞ்சாய் சாமுவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு முகமத் மக்பூப் மன்சூர் இசையமைத்திருக்கிறார்.இவர் மலையாளத் திரையுலகில் பிரபல பின்னணி பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் குறித்து இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,

‘எனக்கு தாய்மொழி மலையாளம் ஆக இருந்தாலும் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கதைகள், சிறுகதைகளை நான் மலையாளத்தில் படித்திருக்கிறேன். அதில் கோடித் துணி என்ற சிறுகதை மனதில் பதிய அதைத் திரைப்படமாக்கி, கிராமத்து கலாச்சாரத்தை திரைப்படம் மூலமாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினேன்.இதற்கேற்ற களத்தைத் தேர்வு செய்ய பல ஊர்களிலும் அலைந்து கடைசியாக சத்தியமங்கலம், களக்காடு பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தினால் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தோம்.அதற்கு முன் அந்த ஊர் கலாச்சாரத்தை புரிந்துகொள்ள நானும் படக்குழுவைச் சேர்ந்த சிலரும் நேராக அந்தக் கிராமத்திற்குச் சென்று சுமார் நான்கு மாதம் வீடு எடுத்துத் தங்கி அங்குள்ள மக்களுடன் பழகி அவர்களது வாழ்வியலை அறிந்துகொண்டு அதன்பின் படமாக்கியிருக்கிறோம்.

’நட்சத்திரம் நகர்கிறது’ மற்றும் ’நவரசா’ ஆகிய தொடர்களில் நடிப்பில் என்னைக் கவர்ந்த கீதா கைலாசம், இந்த அங்கம்மாள் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து அவரிடம் இப்படத்தில் நடிக்கக் கேட்டோம். அவர் கதை முழுவதையும், தனது கதாபாத்திரத்தையும் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார்.அவரும் நாங்கள் தங்கி இருந்த கிராமப் பகுதிகளுக்கு இரண்டு மாதங்கள் முன்பே வந்து மக்களிடம் பழகி அவர்களின் பழக்கவழக்கங்கள், பேச்சு பாவனை போன்றவற்றைப் புரிந்து கொண்டார். குறிப்பாக இப்படித்தான் இந்த பாத்திரம் இருக்கவேண்டும் என்று நான் முடிவு செய்த சுந்தரி என்ற ஒரு மூதாட்டி உடன் நன்கு பழகி கதாபாத்திரத்தை செம்மைப்படுத்தி இருக்கிறார்.அங்கம்மாள் கதாபாத்திரம் ஒரு சுதந்திரமான பாத்திரமாக படைக்கப்பட்டிருக்கிறது. தான் என்ன நினைக்கிறேனோ அது நடக்க வேண்டும் என்று எண்ணுபவர். அவருக்கும் அவரது மகனுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் உள்ள பந்தத்தை இப்படம் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும். சின்னச் சின்ன மாற்றங்களுடன் இது சிறுகதை படிக்கும் உணர்வைத் தரவேண்டும் என்பதால் படத்தின் ஒலிப்பதிவை நேரடியாகச் செய்திருக்கிறோம். இந்தப்படம் ஏற்கனவே ஃபோக்கஸ் சவுத் ஏசியா உள்பட 3 சர்வதேச விருதுகளை வென்றிருக்கிறது.பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களும் இந்தப்படத்தை இரசித்துப் பாராட்டினார்கள் ‘ என்றார்.