டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளதைத் தொடர்ந்து, போட்டி நடைபெறும் அகமதாபாத் நகரிலுள்ள , விடுதிகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
குஜராத் மாநிலத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மாலை 7 மணிக்கு மோதுகின்றன. அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றவுடனேயே, அகமதாபாத்தில் உள்ள தங்கும் விடுதிகளுக்கான தேவை அதிகரித்தது. இதன் காரணமாக அறை வாடகைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன.
நகரில் உள்ள சாதாரண பட்ஜெட் ஹோட்டல்களில் கூட ஒரு இரவு தங்குவதற்கு 15,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், உயர்தர வசதிகள் கொண்ட சொகுசு விடுதிகளில் ஒரு இரவுக்கான வாடகை 56,000 ரூபாய் முதல் 80,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளதால், வெளியூர்களிலிருந்து வரும் ரசிகர்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஹோட்டல் அறைகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து குஜராத் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கத்தின் தலைவர் நரேந்திர சோமானி கூறுகையில், “தற்போது அறைகளின் வாடகை 80,000 ரூபாய் வரை உள்ளது. டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் தங்குவதற்கு இடம் தேடி வருவதால், தேவை அதிகரித்து வருகிறது. எனவே, போட்டி நாளன்று ஒரு இரவுக்கான வாடகை ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று தெரிவித்துள்ளார்.



Leave a Reply